Monday, October 25, 2010

மாற்றத்தின் கருவி - தெய்வானை

மாற்றத்தின் கருவி

 
மதுரை தானம் மக்கள் கல்வி நிலையத்தில் தலைமைத்துவ பயிற்சி நிறைவு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.  விழாவின் இறுதியில் பேசிய கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் நாளை குடியரசு தினம், குடியரசு தின விழாவை இவ்வளாகத்தில் கொண்டாட இருக்கிறோம். இந்த விழாவில், தலைவிகளாகிய நீங்கள் கலந்து கொள்ள விரும்புகிறோம். விருப்பமுள்ளவர்கள் காலை எட்டு மணிக்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் என்றார்.
தலைமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் மதுரை நகர்ப்புறத்தில் உள்ள களஞ்சிய வட்டாரங்களின் நிர்வாகிகள். தலைமைத்துவ பயிற்சி மூன்று நாட்கள் தங்கிப் பயிலும் பயிற்சி. இப்பயிற்சியில் குடும்பத்திலிருந்து மூன்று நாட்கள் பிரிந்து இருந்தவர்களிடம் தான் நான்காவது நாள் காலையிலேயே கலந்து கொள்ள விருப்ப அழைப்பு. பெண்கள் குடும்பத்தை நகர்த்துபவர்கள். இவர்கள் இல்லாத நிலையை, அனுபவித்தவர்கள் நன்கு அறிவர். குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டே அமைப்பு/நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, அலங்கரிக்க தவறாது பயிற்சிகளில் பங்கெடுக்கின்றனர்.
அடுத்த நாள் பணியாளர்களின் வருகைக்கு முன்பே ஐந்து தலைவிகள் வருகை புரிந்திருந்தனர். தன் கணவரையும் உடன் அழைத்து வந்து விழாவில் கலந்து கொண்டார் திருமதி தெய்வானை. விழா முடிந்தபின் நடைபெற்ற சிரமதானப் பணியிலும் முழுமையாக ஈடுபட்டு சற்று புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்தார் தெய்வானை.
மானாமதுரைக்கருகில் சிறுகுடி கிராமத்தில் சுப்பையா- செல்லம்மாள் இணையர்களுக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது பிறப்பின்போது இந்தியாவும் பாகிஸதானும் போரிட்டுக் கொண்டிருந்தனவாம். இந்த நேரத்தில் சுப்பையாவும், செல்லம்மாளும் கூட சண்டையிட்டுக் கொண்டனர். தெய்வானைக்கு முன்னும் பின்னும் சகோதரிகள் தான். சுப்பையா குடும்ப தண்டவாளத்திலிருந்து தடம்புரள அக்காவின் வழிகாட்டுதலிலேயே வளர்ந்திருக்கிறார் தெய்வானை.
இளம் வயதை சிறுகுடி மற்றும் இடைகாட்டூர் பள்ளிகளில் பயின்று கழித்த்தார். மதுரை சொக்கிகுளத்தில் விடுதியில் தங்கு எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்றார். மேற்கொண்டு பள்ளி படிப்பு என்பது முற்றுப் பெற்றது. ஆனால், கற்றல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மதுரையில் உள்ள ராஜா கிளினிக்கில் அக்கா நர்சாக பணிபுரிந்தார். குடும்பத்தின் சூழல் அக்காவோடு பணிபுரிய பணிந்தது. கணக்காளராக மூன்று ஆண்டுகள் செம்மையான கணக்குப் பராமரிப்பால் தெய்வானை தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இக்காலத்தில் செவிலியர் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1989-இக் கட்டுரையில் தெய்வானையின் திருமணத்தை குறிப்பாக உணர்த்தும் ஆண்டு. ஆம், மானாமதுரையில் மகளாக இருந்தவர் மதுரைக்கு மருமகளாக, கோவிந்தசாமியுடன் வாழ்க்கையில் இணைந்தார். இருவீட்டாரும் உறவுகளாக இருந்தாலும் தெய்வானைக்கு பரிச்சயம் குறைந்த இடம்தான்.
முழுவதும் பெண்கள், பெண்கள் நிர்வாகம் என்று இருந்த குடும்பத்திலிருந்து, ஆண்கள் அதிகமிருந்த கோவிந்தசாமியின் வீடும், உறவுகளும் புதிதுதான். மகள் இல்லாத மாமியார் மருமகளை மகளாகவே பாவித்தார். கணவர் கோவிந்தசாமி ஆவினில் பணிபுரிந்தார். பிற்பாடு அந்தப் பணியிலிருந்து விலகி சுய முயற்சியில் ...
திருமணமாகி பத்து வருடங்கள் வீட்டுக்குள்ளேயே கடந்தது. மாமனார், மாமியார், கணவர். கொழுந்தனார், குழந்தை என்ற கூட்டுக் குடும்பத்தில் மருமகளாய் தன் பணியை செவ்வனே செய்து வந்தார். மாமியார் மெச்சிய மருமகளாக (மகளாக) வாழ்க்கைப் பயணம் கடந்தோடியது.
2001-ல் தெய்வானையை புதிய பரிமாணத்தில் மாற்றியமைய அச்சாறமிட்ட ஆண்டு. ஆம் 'களஞ்சியம்' என்கிற சுய உதவிக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்ட ஆண்டு. லதா என்கிற சமூகப் பணியாளரின் முயற்சியில் 'மல்லிகை' களஞ்சியம் உருவாக்கப்பட்டது. இந்த மல்லிகை களஞ்சியத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
மல்லிகை வாசம் குறைந்து போனது. ஒரு சிலரின் சொந்த செயல்பாடுகளினால் மல்லிகை மாலையிலிருந்து உதிர்ந்து ஓடியது. பின் தெய்வானைக்கு நட்பு களஞ்சியம் கை கொடுத்து உறுப்பினராக்கியது. தனது சிறந்த செயல்பாடுகளினால் பகுதி தலைவியானார். செல்லூர் வட்டாரக் களஞ்சியத்தின் உப தலைவி, களஞ்சிய இயக்க செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் தனக்கான தடம் பதித்தார். தற்போது 'சுகம்' மருத்துவமனையின் பொருளாளராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பணியாளர்களை ஆய்வு செய்வதிலும், மதிப்பிடுவதிலும் கை தேர்ந்தவர் தெய்வானை. தான் இருக்கின்ற பகுதியை முன்னோடிப் பகுதியாக மாற்றியதில் திருமதி. தெய்வானையின் பங்கு முக்கியமானது. இவர் சார்ந்துள்ள வைத்தியநாதபுரம் பகுதி விழாக்களில் கலந்து கொள்வது, களஞ்சிய செயல்பாடுகளில் முன்னோடியாக இருப்பது என செல்லூர் களஞ்சிய வட்டாரத்தில் முதன்மையாக இருக்கிறது.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் இணைந்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பினரிடமும் தனித்தனியாக பேசி, புரியவைத்த 100 சதவீதம் காப்பீட்டில் இணைய வைத்தது, தான் ஏற்றுள்ள பொறுப்பை முழுமைபடுத்தியுள்ளார் என்றே கூறலாம்.
கூட்டம் என்று வாசல்படி தாண்டிய போதெல்லாம் வசவுகளை பெற்றது ஒரு காலம். இன்று காலம் கை கூடியுள்ளது. ஆம் குடும்ப உறுப்பினர்களே வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றனர். தான் மட்டும் வாழ்வது, வளர்வது அல்ல வாழ்க்கை.  சுற்றமும், நட்பும் சேர்ந்து வாழ்வது, வளர்வது தான் வாழ்க்கை என்பதை வாழ்ந்துகாட்டிக் கொண்டிருக்கிறார்.
பெரிய செல்வ சீமாட்டிகள் தான் பொதுப்பணிகளில் ஈடுபடுவது என்ற வரையறை அடித்து நொறுக்கியவர்கள் சுய உதவிக் குழுவில் ஏழ்மையில் உள்ள பெண்கள். பிறந்தது, வளர்ந்தது, வாக்கப்பட்டது, வாழ்ந்து கொண்டிருப்பது என்று நான்கு நிலையிலும் 'வயிறார சாப்பாடு, இருக்க வீடு, உழைக்க கூடு' இதுதான் தெய்வானையின் குடும்ப நிலை. ஏழ்மையிலும் நேர்மை இந்த சொற்றொடர் மிகப் பொருத்தமானதாகும். ஏழைகள் நேர்மை தவறுவது, தவறிக் கூட நடைபெறுவதில்லை என்பதைச் சொல்ல முடியும்.

பகுதி உருவாக்குதல் தொடர்பான பயிற்சி கொடுக்க தெய்வானை அவர்களை அழைத்துச் சென்று திரும்பிய பின் பயணப்படி கொடுக்க தொகையைக் கேட்டேன். மெத்தப் படித்தவர்கள் இதில் பார்த்துவிடுவோமா? அதில் பார்த்து விடுவோமா? என்று ஏங்கும் இத்தருணத்தில் அவரது செயல்பாடு உண்மை என்ற வார்த்தை புவியில் புலங்குவதற்கு அனுமதியளிக்கலாம் என்றே தோன்றியது.
இப்படி பயிற்சி, கூட்டம், பிரச்சினை தீர்க்க, உறுப்பினருக்கு வீடு ஒத்திக்கு வாங்க என நேரம் மற்றும் நாட்களை கழிக்கிறீர்களே, உங்களது சொந்த நலன் பாதிக்கப்படாதா? என்ற கேள்விக்கு, நான் இங்கிருந்து வந்தவள், இவர்களுக்கு நான் செய்யாமல் ஓபாமா வந்தா செய்வார் என்ற பதில் ஓங்கி அறைந்தது. சற்று நிதானமாக பொருளாதாரம் நிரந்தர ஆதாரம் இல்லை. என் கணவர் வேலை செய்கிறார். சொந்த வீடு, ஒரு பையன் சந்தோஷமாக இருக்கிறேன். பணத்தை சம்பாதிக்கவில்லை, மக்களை சம்பாதித்துள்ளேன். என்னைப் போன்றோரைப் பார்க்கும் போது சந்தோஷமான வார்த்தைகளை வழங்குகிறார்கள். பிறவிப் பயன் அதுதானே...

என்னுடைய இளம் வயதில் ஒரு மருத்துவமனையில் கணக்காளராக இருந்தேன். இன்று மக்களாக நடத்துகிற பெரிய 'சுகம்' மருத்துவமனையில் பொருளாளர். நான் எவ்வளவு பணம் சம்பாதித்திருந்தாலும் இது கிடைத்திருக்குமா? நான் செய்ததது எனது நேரத்தையும், உழைப்பையும் மட்டுமே. எதிர்பார்த்து இருக்க, இருந்திட நான் மூன்றாம் தர மனிதரில்லை. அமைப்பின் அங்கம்.
மக்களிடம் பேசி மருத்துவ காப்பீடு செய்யப் பணிக்கிறோம். அதே நேரம் எங்களது மருத்துவமனை மருத்துவர்களின் செயல்பாடுகளையும் மதிப்பிடுகிறோம். யாராக இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசுவதுதான் எனது இயல்பு. மருத்துவர்களிடமும், மற்ற பணியார்களிடமும் அப்படித்தான். வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இச்செயலை சிலர் பாராட்டுவர், சிலர் மென்மையாக நடந்து கொள்ளலாம் என்பர். எது எப்படி இருந்தாலும் பின்னாடி பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.
தனது பகுதியில் உள்ள 400 உறுப்பினர்களையும் பெயர் சொல்லி அழைக்க இயலும் என்கிறார். மற்றவர்களைப் பார்த்தால் எங்கள் வட்டார உறுப்பினர், இந்த வட்டார உறுப்பினர் என்று சொல்ல முடியும் என்றார். உறவாக நெருங்கிவிட்டமையால் தான் இவ்வளவு நம்பிக்கை இவருக்குள் ஊன்றியுள்ளது. பயிற்சி, விழா, கூட்டம் என அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பார்.
மற்றவர்களை புரியவைக்கும் எளிமையான பேச்சு, எதார்த்தமான செயல்கள், நேரம் தவறாமை, பேச்சு மாறாமை போன்றவற்றை கெட்டியாகப் பிடித்திருக்கும் தெய்வானையின் சிறு வயது கனவு வக்கீல் (வழக்குரைஞர்) ஆவது. இது, அவரது அக்காவின் விருப்பமும் கூட. கால ஓட்டம் இவரது கனவை மாற்றியது. ஆனால், இவர் பிறர் மாற்றத்திற்கான கருவியாகவும் மாறி விட்டார்.

வைத்தியநாதபுரம் பகுதி இணையாளர் கூறுகையில் எங்க பகுதியோட 'பொக்கிஷம்' ஒவ்வொரு உறுப்பினரையும் தெரியும். அந்த உறுப்பினர்களின் வாழ்நிலை அறிந்துள்ளதால், அவர்களுக்காக திட்டமிடவும் செய்வார்.
எங்கேயும் பணி, பயிற்சி விஷயமாக செல்வதென்றால் பாதை தெரியாது, பயம் என்று பேசுவதே இல்லை. பாதையை தெரிஞ்சுக்கலாம் என்னும் அளவிற்கு பக்குவப்பட்டவர். எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார்.

தானாக முன்வந்து வரிந்துகட்டி பணிசெய்யப் பக்குவப்பட்டிருக்கும் தெய்வானை எதையும் எதிர்பார்த்து செய்பவராக இல்லை என்கிறார். இவர்கள் மத்தியில் கணக்காளராக பணியாற்றிய அங்கயற்கண்ணி.
சுய உதவிக் குழுக்கள் மிகப் பெரிய மாற்றத்தின் கருவியாய் உருவெடுத்திருப்பதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. தெய்வானை போன்ற பெண் தலைவர்களை சமூகத்திற்கு அடையாளங்காட்டி, பொதுவாழ்விலும் பெண்கள் சாதிக்க முடியும் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறது.

No comments:

Post a Comment